பட்டுக்கோட்டை : தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நெற்கதிர்மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலச்சங்கம், டிசம்பர் 3 இயக்கத்தின் சார்பில் நேற்று சமத்துவ பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
பட்டுக்கோட்டை, பேராவூரணி, மதுக்கூர், அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் நேற்று பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஒன்று திரண்டு சமத்துவ பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடினர். நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் பஹாத்முகமது தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் ஜலீல்முஹைதீன், மாவட்ட பொருளாளர் சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பட்டுக்கோட்டை ஒன்றியத் தலைவர் அஷ்ரப் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினர்களாக பட்டுக்கோட்டை நகர திமுக செயலாளர் செந்தில்குமார், சங்கத்தின் மாநில சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் செல்வராசு, உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தீனதயாளன், செங்கிஸ்கான் ஆகியோர் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுடன் ஒன்றிணைந்து சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடினர். மாற்றுத்திறனாளிகள் அனைவரும் ஒரே இடத்தில் ஒன்றிணைந்து புதுப்பானைகளில் பொங்கல் வைத்து பொங்கலோ பொங்கல் என்று பொங்கலை கொண்டாடினர்.
அதனைத் தொடர்ந்து பானை உடைத்தல், கயிறு இழுத்தல் போட்டிகள் நடந்தது. கண்களைக் கட்டிக் கொண்டு எங்களாலும் பானையை உடைக்க முடியும் என்பதை போட்டியின் மூலம் மாற்றுத்திறனாளிகள் நிரூபித்து காண்பித்தனர்.
அதே போல் கயிறு இழுத்தல் போட்டியிலும் இருபுறமும் மாற்றுத்திறனாளிகள் நின்று கயிறை இழுத்து போட்டியில் வென்றனர். பானை உடைத்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி ஒன்றிய செயலாளர் ஆனந்தகிருஷ்ணனுக்கு நகர திமுக செயலாளர் செந்தில்குமார் ரொக்கப் பரிசு வழங்கி கௌரவப்படுத்தினார்.
அதேபோல் கயிறு இழுத்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி மாவட்டத்தலைவர்பஹாத்முகமது அணிக்கு சங்கத்தின் மாநில சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் செல்வராசு ரொக்கப்பரிசு வழங்கி கௌரவித்தார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய பொருளாளர் பிரபாகரன், மகளிரணி மாவட்டத் தலைவி ரேவதி, செயலாளர் அகிலா, மாவட்ட துணைத்தலைவர் பாலசுப்பிரமணியன், கலையரசி மற்றும் சங்க பொறுப்பாளர்கள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தைச் சேர்ந்த பருவ கால பணியாளர்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
The post பட்டுக்கோட்டையில் பொங்கல் விழா கண்களை கட்டி பானை உடைத்து மாற்று திறனாளிகள் அசத்தல் appeared first on Dinakaran.