பந்தலூர்: பந்தலூர் எம்.ஜி.ஆர். நகர் பகுதி மக்களுக்கு குடிநீர் கிடைக்காமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நீலகிரி மாவட்டம் நெல்லியாளம் நகராட்சிக்குட்பட்ட பந்தலூர் எம்ஜிஆர் நகர் மற்றும் நத்தம் பகுதியில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு நெல்லியாளம் நகராட்சி சார்பில் அருகே உள்ள தனியார் தேயிலைத் தோட்டம் பகுதியில் குடிநீர் ஆதாரம் உள்ள இடத்தில் தடுப்பணை அமைத்து, குழாய்கள் பதித்து குடிநீர் விநியோகம் செய்து வருகின்றனர்.
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் தடுப்பணையில் போதிய நீர் இல்லாமல் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. முறையாக பராமரிப்பு இல்லாமல் முட்புதர்கள் சூழ்ந்து தடுப்பணையின் சுற்றுப்புற பகுதி இருந்து வருவதால் போதுமான அளவிற்கு குடிநீரை தேக்கி வைக்க முடியாமல் உள்ளது. தடுப்பணையை தூர்வாரி போதிய பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் நகராட்சிக்கு கோரிக்கை விடுத்து வந்த நிலையில் நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்காததால் கோடைகாலத்தில் குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
எனவே,பராமரிப்பு இல்லாமல் இருக்கும் தடுப்பணையை முறையாக தூர்வாரி,சீரமைத்து பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்திட நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அதுவரை நகராட்சி மூலம் லாரிகளில் குடிநீர் விநியோகம் செய்திட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post பந்தலூர் எம்ஜிஆர் நகரில் குடிநீர் தட்டுப்பாடு; தடுப்பணையை தூர்வாரி சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.