மதுரை: பல கோடி சொத்துக்களை அபகரிப்பதற்காக கடத்தப்பட்ட மதுரை தொழிலதிபர் பத்திரமாக மீட்கப்பட்டார். இதுதொடர்பாக 8 பேர் கைதாயினர். திருச்சியைச் சேர்ந்தவர் பெரியகருப்பன்(58). இவர் கடந்த 6ம் தேதி மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில், தனது மனைவியின் தம்பியான ஆட்டோமொபைல் நிறுவன தொழிலதிபர் சுந்தரம், மதுரை நாராயணபுரம் குரு நகரில் தனியாக வசித்து வந்தார். அவரை காணவில்லை. சுந்தரத்தின் வீடு மற்றும் அந்தப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில், 3 பேர் வீட்டில் இருந்த சிசிடிவி ஹார்ட் டிஸ்க், மோடம் மற்றும் ஆவணங்களை திருடியதுடன், சுந்தரத்தையும் காரில் கடத்தி சென்று விட்டதாக கூறியிருந்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து தீவிரமாக தேடிவந்தனர்.
விசாரணையில், திண்டுக்கல்லைச் சேர்ந்த மரியராஜ்(70), சுந்தரத்தின் பெயரில் திண்டுக்கல்லில் இருந்த ரூ.பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை அபகரிக்கும் நோக்கில் பிரச்னை செய்து வந்துள்ளார். இதுதொடர்பாக திண்டுக்கல் முன்சீப் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் சுந்தரத்திற்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்தது. இதனால் மரியராஜ் ஐகோர்ட் கிளையில் மேல் முறையீடு செய்துள்ளார். மேலும் சுந்தரத்தின் சொத்துக்களை மிரட்டி அபகரிக்கும் நோக்கில் காரைக்குடியை சேர்த்த ராமச்சந்திரன் (எ) அழகுசுந்தரம்(42), மயிலாடுதுறையை சேர்த்த கிரி (எ) கிரிவாசன்(48) ஆகியோர், ஒரு காரில் சிவகங்கை மாவட்டம் பூவந்தி வழியாக சுந்தரத்தை காரைக்குடிக்கு கடத்தி சென்றுள்ளனர். அங்கு வேறு ஒரு வாகனத்தில் மாற்றி மயிலாடுதுறை சென்று நாகப்பட்டினத்தை சேர்ந்த ஜெனமேந்திரன்(38) என்பவரின் வீட்டில் வாகனத்தை மறைத்து வைத்தது தெரியவந்தது.
இதையடுத்து, கடந்த 15ம் தேதி மயிலாடுதுறையைச் சேர்ந்த அருள்செல்வன்(35), முத்துக்கிருஷ்ணன்(42), விக்னேஷ்(24) மற்றும் தென்காசியை சேர்ந்த அருள்(42), ஜெனமேந்திரன் ஆகியோரையும், இதைத் தொடர்ந்து கடத்தலின் மூளையாக செயல்பட்ட திண்டுக்கல் மரியராஜ் என்பவரையும் கைது செய்து, தொடர்ந்து விசாரித்தனர். தீவிர விசாரணையில் கடத்தல் கும்பல் வடமாநிலங்களில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. நாக்பூர், லக்னோ மற்றும் பிலாஸ்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தில், மேற்கண்ட இடங்களுக்கு தனிப்படையினர் சென்று தேடி வந்தனர்.
இதையறிந்த கடத்தல் கும்பல் தர்மபுரி, சேலம் மற்றும் திருச்சி வழியாக காரில் மதுரை வந்தனர். அப்போது தனிப்படை போலீசார், மதுரை பாண்டி கோவில் அருகே நேற்று முன்தினம் காரை சுற்றி வளைத்தனர். உடனே காரில் இருந்து இறங்கிய ராமச்சந்திரன் (எ) அழகுசுந்தரம், கிரி (எ) கிரிவாசன் ஆகியோர், பாலத்தில் இருந்து கீழே குதித்தனர். இதில் இருவருக்கும் காலில் காயம் ஏற்பட்டது. இவர்களை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். காரில் இருந்த தொழிலதிபர் சுந்தரம் பத்திரமாக மீட்கப்பட்டார்.
The post பல கோடி சொத்தை அபகரிக்க கடத்தப்பட்ட தொழிலதிபர் மீட்பு: 8 பேர் கைது; தப்பி ஓடிய 2 பேருக்கு கால் முறிவு appeared first on Dinakaran.