பள்ளிகொண்டா: பள்ளிகொண்டாவில் பெய்த கனமழையால் பழுதான டிரான்ஸ்பார்மர், மின் கம்பங்களை உடனடியாக சீரமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் கடந்த 1 வாரமாக மழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளம், கண்மாய்கள் உட்பட நீர்நிலைகள் நிரம்பும் நிலையில் உள்ளது. இந்நிலையில் பள்ளிகொண்டா பகுதியில் நேற்று மாலை 5 மணி முதல் இன்று காலை வரை விடிய விடிய இடி, மின்னலுடன் கன மழை கொட்டி தீர்த்தது.
அப்போது அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள டிரான்ஸ்பார்மர் பழுதாகி மின்சப்ளை பாதிக்கப்பட்டது. மேலும், தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலைகளில் உள்ள சில மின்கம்பங்கள் பழுதாகின. இதனால் அந்த பகுதியில் இரவு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இதையறிந்த பள்ளிகொண்டா மின்வாரிய ஊழியர்கள் இன்று காலை பழுதான டிரான்ஸ்பார்மர்கள், மின்கம்பங்களை துரிதமாக செயல்பட்டு சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.‘கனமழையின்போதும் முடிந்த அளவிற்கு மின்சாரம் துண்டிக்காமல் சப்ளை கொடுத்து வருகிறோம், இடி, மின்னல் சூறைக்காற்று அதிகமானால் மட்டும் மின் இணைப்பை துண்டித்து சப்ளை நிறுத்துகிறோம்’ என்று பள்ளிகொண்டா மின்வாரிய இளநிலை பொறியாளர் இலியாஸ் தெரிவித்தார்.
The post பள்ளிகொண்டா பகுதியில் கனமழை: பழுதான டிரான்ஸ்பார்மர்கள் மின் கம்பங்கள் சீரமைப்பு appeared first on Dinakaran.