ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடந்த இடத்தை ஆய்வு செய்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, தாக்குதலில் காயமடைந்து அனந்த்நாக் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். இதனிடையே, இந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக என்ஐஏ துணையுடன் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு புல்வாமா தாக்குதலுக்கு பின்பு நடந்த மிக மோசமான தாக்குதலாக இந்த பஹல்காம் தாக்குதல் கருதப்படுகிறது. பஹல்காமின் பைசரன் புல்வெளியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை கொடூரத் தாக்குதல் நடத்தினர். இதில் இரண்டு வெளிநாட்டினர் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் சுற்றுலா பயணிகள். இந்தத் தாக்குதலில் பலர் காயமடைந்தனர். அனந்த்நாக் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை உள்துறை அமைச்சர் அமித் ஷா புதன்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினார்.