கராச்சி: பாகிஸ்தானில் துப்பாக்கி சூடு நடத்தி எக்ஸ்பிரஸ் ரயிலை கடத்திய 33 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். துப்பாக்கி சண்டையில் 21 பயணிகள் மற்றும் 4 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட நிலையில், அனைத்து பயணிகளும் மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் 9 பெட்டிகளில் சுமார் 400 பயணிகளுடன் ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயில் குவெட்டாவில் இருந்து கைபர் பக்துன்க்வாவில் உள்ள பெஷாவருக்கு நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் போலன் மாவட்டத்தின் முஷ்காப் பகுதியில் சுரங்கபாதையில் ரயில் சென்றபோது வெடி வைத்து தீவிரவாதிகள் தண்டவாளத்தை தகர்த்தனர். தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்தி ரயிலை தங்களது கட்டுப்பாட்டில் எடுத்தனர்.
பலுசிஸ்தான் லிபரேஷன் ஆர்மி இந்த ரயில் கடத்தல் சம்பவத்துக்கு பொறுப்பேற்றது. மேலும் 100க்கும் மேற்பட்ட பயணிகளை பிணை கைதிகளாக பிடித்துவைத்தனர். இந்த சம்பவத்தின்போது 2 ரயில் ஓட்டுனர்கள் மற்றும் 6 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக பிஎல்ஏ தெரிவித்தது. இந்நிலையில் ரயிலை சுற்றி வளைத்த ராணுவ வீரர்கள், பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் போலீசார் தீவிரவாதிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்கள். மேலும் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ஆடைகளை அணிந்த தீவிரவாதிகள் பெண்கள் மற்றும் குழந்தைகளை கும்பலாக தங்கள் அருகில் உட்காரும்படி கட்டாயப்படுத்தி உள்ளனர்.
இதனால், மிகுந்த எச்சரிக்கையுடன் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த சண்டையில் ரயிலை கடத்திய தீவிரவாதிகள் 33 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் 21 பயணிகள் மற்றும் 4 ராணுவ வீரர்கள் பலியானார்கள். 30 மணி நேரம் நடந்த இந்த துப்பாக்கி சண்டைக்கு பிறகு அனைத்து பயணிகளும் மீட்கப்பட்டுவிட்டதாக நேற்று இரவு பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் அகமது ஷரீப் அறிவித்தார். மீட்கப்பட்ட பயணிகள் வேறு ரயில்கள் மூலமாக கச்சி மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மீட்பு நடவடிக்கையின்போது 30 பயணிகள் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
The post பாகிஸ்தானில் எக்ஸ்பிரஸ் ரயிலை கடத்திய 33 தீவிரவாதிகளை சுட்டுக்கொன்று பயணிகள் மீட்கப்பட்டனர்: துப்பாக்கி சண்டையில் 25 பேர் பலியான சோகம் appeared first on Dinakaran.