புதுடெல்லி: டெல்லியில் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால் அரசுப் பள்ளிகளில் இலவச கல்வியையே ஒழித்துவிடும். மத்தியில் ஆளும் பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கையானது தேசிய தலைநகருக்கும், நாட்டுக்கும் ஆபத்தானது என ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் எச்சரித்துள்ளார்.
70 தொகுதிகளக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 5-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. பிப்ரவரி 8-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில், தனது தேர்தல் அறிக்கையின் முதல் பகுதியை கடந்த வாரம் வெளியிட்ட பாஜக, அதன் இரண்டாம் பகுதியை இன்று வெளியிட்டது. அதில், ‘டெல்லியில் உள்ள அரசு கல்வி நிறுவனங்களில் ஏழை மாணவர்களுக்கு கே.ஜி (கிண்டர் கார்டன்) முதல் பி.ஜி (போஸ்ட் கிராஜுவேட்) வரை இலவசக் கல்வி வழங்குவோம்’ என்று பாஜக புதிய வாக்குறுதியை வெளியிட்டுள்ளது. இதனை பல்வேறு கட்சிகளும் விமர்சித்து வருகின்றன.