சென்னை: மதுரையில் கல்வெட்டு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றும், 12 வரலாற்று சின்னங்கள் பாதுகாக்கப்பட்டவைகளாக அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். தமிழக சட்டப் பேரவையில் நேற்று தொல்லியல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்த பின்பு அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:
* கீழடி அருங்காட்சியகம், பொருநை அருங்காட்சியகம், தரங்கம்பாடி கோட்டை ஆகியவற்றில் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய ஒலி-ஒளிக் காட்சி அமைக்கப்படும்.
* தமிழ்மொழியின் தொன்மையையும், பண்டைய தமிழ்நாடு் அரசியல், சமூக பொருளாதார வரலாற்றைப் பறைசாற்றுகின்ற கல்வெட்டுகளை காலவாரியாக தொகுத்து ‘கல்வெட்டு அருங்காட்சியகம்’ மதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் அமைக்கப்படும்.
* நிலவியல் மற்றும் வரலாற்றுப் பின்னணியில் தினை நிலவரைபடம் உருவாக்கும் திட்டம் ரூ.12 லட்சத்தில் மேற்கொள்ளப்படும்.
* தமிழ்நாடு தொல்லியல் மற்றும் அருங்காட்சியகவியல் நிறுவனத்தில் ‘சுவடியியல்’ என்னும் ஓராண்டு பட்டப்படிப்பு ரூ.31 லட்சம் செலவில் அறிமுகப்படுத்தப்படும்.
* தமிழ்நாடு தொல்லியல் மற்றும் அருங்காட்சியகவியல் நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கு தற்போது மாதந்தோறும் வழங்கி வரும் கல்வி பயிலுதவித் தொகை ரூ.6000ல-லிருந்து ரூ.8000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
* வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 12 வரலாற்று சின்னங்கள் பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
The post பாதுகாக்கப்பட்டவையாக 12 வரலாற்று சின்னங்கள் அறிவிக்கப்படும்: ‘சுவடியியல்’ ஓராண்டு பட்டப்படிப்பு அறிமுகம்; அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் appeared first on Dinakaran.