புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் தொடக்க உரை குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, “பாவம்… எளிய பெண் மிகவும் சோர்வாக இருந்தார்” என்று தெரிவித்துள்ளார். இந்தக் கருத்தை இழிவானது என்று பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் வெள்ளிக்கிழமை காலை தொடங்கியது. அதில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தொடக்க உரையாற்றினார். குடியரசுத் தலைவரின் வழக்கமான உரைக்கு பின்பு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியிடம் உரை குறித்து கருத்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த சோனியா காந்தி, "குடியரசுத் தலைவர் உரையின் இறுதிப் பகுதியை வாசிக்கும்போது மிகவும் சோர்வடைந்து விட்டார். அவரால் பேச முடியவில்லை. பாவம்" என்று வருத்தப்பட்டிருந்தார். அப்போது காங்கிரஸ் எம்.பி.க்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி இருவரும் உடன் இருந்தனர்.