வாஷிங்டன்: பிணைக் கைதிகளை விரைவில் விடுவிக்காவிட்டால் ஹமாஸுக்கு முடிவுக்கட்டப்படும் என அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேல் – பாலஸ்தீனப் பிரச்னை என்பது பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்நிலையில், காசா பகுதியை ஆளும் ஹமாஸ் அமைப்பினர் அக்டோபர் 2023ல் இஸ்ரேல் மீது நடத்திய திடீர் தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டதுடன், 252 பேர் பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் செல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. 15 மாதங்களாக போர் நடைபெற்ற நிலையில், தற்போது நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு, இரு நாடுகளும் பிணைக்கைதிகளை பரிமாறி வருகின்றன.
இதற்கிடையே, பிணைக் கைதிகளில் சிலர் மட்டுமே திரும்ப அனுப்பப்பட்டுள்ள நிலையில் மற்றவர்களை அனுப்புதை ஹமாஸ் நிறுத்திவைத்துள்ளது. இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில்; ஹமாஸ் அமைப்பினர் தங்களது பிடியில் உயிருடன் உள்ள பிணை கைதிகள் அனைவரையும் விடுவித்து கொல்லப்பட்டவர்களின் உடல்களையும் ஒப்படைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். இந்த விவகாரத்திற்கு முடிவு கட்ட தேவையான அனைத்து உதவிகளையும் இஸ்ரேலுக்கு செய்து வருவதாக குறிப்பிட்ட அவர், பிணை கைதிகளை விடுவிக்காவிட்டால் ஹமாஸ் அமைப்பின் ஒரு உறுப்பினர் கூட உயிருடன் இருக்க முடியாது என தெரிவித்தார். பிணை கைதிகளை விடுவித்து காஸாவை விட்டு வெளியேறாவிட்டால் ஹமாஸ் அமைப்புக்கு முடிவு கட்டப்படும் என அதிபர் டொனல்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
The post பிணைக் கைதிகளை விரைவில் விடுவிக்காவிட்டால் ஹமாஸுக்கு முடிவுக்கட்டப்படும்: அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை! appeared first on Dinakaran.