பிரபுதேவாவும் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் படம், ‘மூன் வாக்’ . பிஹைண்ட்வுட்ஸ் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி மனோஜ் என்எஸ் இயக்கும் இந்தப் படத்தில் யோகிபாபு, மொட்ட ராஜேந்திரன், நிஷ்மா செங்கப்பா, சுஷ்மிதா நாயக், ரெடின் கிங்க்ஸி, மலையாள நடிகர்களான அஜ்ஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்துக்காக, ஒரு பாடல் காட்சியை முழுவதும் கிராபிக்ஸில் உருவாக்கியுள்ளனர். இதுபற்றி படக்குழு கூறும்போது, “படத்தின் வசனக் காட்சிகள் முடிவடைந்துவிட்டன. போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. இதில் 5 பாடல்கள் உண்டு. அனைத்தும் நடனத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகியுள்ளன. ஒரு பாடல் காட்சியை முழுவதும் கிராபிக்ஸில் உருவாக்கி இருக்கிறோம். ஃபேன்டஸியான உலகத்தில் நடப்பது போல உருவாக்கப்பட்டுள்ள அந்தப் பாடல் காட்சி ரசிகர்களுக்கு புதுமையாக இருக்கும்” என்றனர். இந்நிலையில் இந்தப் படத்தின் உலகளாவிய திரையரங்க விநியோக உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.