உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெறுகிறது. இந்நகரில் வசிக்கும் முஸ்லிம்கள், மகா கும்பமேளாவுக்கு வருபவர்களை தங்கள் பகுதியிலும் குடியிருப்புகளிலும் தங்கவைத்து உதவுகின்றனர். இத்துடன், அவர்களுக்கு உணவு மற்றும் போர்வைகளையும் வழங்குகின்றனர். இந்நிகழ்வுகள், பிரயாக்ராஜில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் நகாஸ் கொஹன்னா, சவுக், ரோஷன்பாக், சேவை மண்டி, ராணி மண்டி மற்றும் ஹிம்மத்கன்ஞ் ஆகிய பகுதிகளில் தொடர்கின்றன.
கடந்த ஜனவரி 27 நள்ளிரவு, மகா கும்பமேளாவில் நெரிசல் ஏற்பட்டது. இதற்கு அடுத்த நாள் கும்பமேளாவுக்கு வந்தவர்கள் காவல் நிலையங்களில் தஞ்சம் கேட்டு குவியத் தொடங்கினர். இதைப் பார்த்த அந்நகர முஸ்லிம்கள் தங்கள் பங்குக்கு ஏதாவது உதவி செய்ய முடிவு செய்தனர். இதில், முஸ்லிம்களின் நிர்வாகப் பள்ளியான யாத்கார் ஹுசைனி இண்டர் காலேஜின் வளாகம் திறந்துவிடப்பட்டது. இங்கு கும்பமேளாவுக்கு வந்தவர்கள் தங்க அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கு குளிருக்கான கம்பளிகளும், போர்வைகளும் வழங்கப்பட்டன. மூன்று வேளை உணவும் முஸ்லிம்கள் சார்பில் விநியோகிக்கப்பட்டது.