புழல்: செங்குன்றம் அருகே பிரியாணி கடையில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 5 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செங்குன்றம் அடுத்த அலமாதி, எடப்பாளையம் – திருவள்ளூர் நெடுஞ்சாலை பகுதியில் ஒரு பிரியாணிக் கடை உள்ளது. இந்த, கடையில் நேற்று முன்தினம் இரவு எடப்பாளையம், ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் (25), கார்த்திக் (28), சரவணன் (30) ஆகிய 3 பேரும் பிரியாணி சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு மதுபோதையில் வந்த, எடப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி (22), கோபி (22) ஆகிய 2 பேரும், பிரியாணி சாப்பிட்டவர்களிடம் தகராறு செய்தனர். இதில், இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டதில் 5 பேரும் படுகாயமடைந்தனர்.
இதனைகண்ட அக்கம் பக்கத்தினர், படுகாயமடைந்த 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக நல்லூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்த சோழவரம் போலீசார், இரு தரப்பிற்குமிடையே ஏற்பட்ட தகராறு தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
The post பிரியாணி கடையில் கோஷ்டி மோதல்: 5 பேர் படுகாயம் appeared first on Dinakaran.