கொடைக்கானல்: கொடைக்கானலில் பிளாடிக் குடிநீர் பாட்டில்களை கொண்டு வந்த ஆந்திரா சுற்றுலா பஸ்சுக்கு நகராட்சி அதிகாரிகள் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். கொடைக்கானல் உலக பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாகும். இங்கு பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வருவதற்கும், பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறும் சுற்றுலா வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். வாகனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் நேற்று கொடைக்கானல் நகராட்சி சுகாதார அலுவலர் தினேஷ்குமார் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் ராஜாமணி, மாரிமுத்து மற்றும் அலுவலர்கள் நகரில் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது நட்சத்திர ஏரி அருகே வாகன நிறுத்தத்தில் இருந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பஸ்சை சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்கள் நூற்றுக்கணக்கில் வாகனத்தின் மேற்பகுதியில் அடுக்கி வைத்து கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அவைகளை பறிமுதல் செய்து சுற்றுலா பஸ் டிரைவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். இனி வரும் காலங்களில் பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை கொடைக்கானலுக்கு கொண்டு வந்தால் சம்பந்தப்பட்ட வாகனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
The post பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுடன் வந்த ஆந்திரா சுற்றுலா பஸ்சுக்கு அபராதம்: கொடைக்கானல் நகராட்சி அதிகாரிகள் அதிரடி appeared first on Dinakaran.