புதுடெல்லி: "எதிர்க்கட்சிக் கூட்டணி ஒன்றுபட்டு பிஹாரை முன்னெடுத்துச் செல்ல தயாராக உள்ளது. இந்த முறை பிஹாரில் என்டிஏ ஆட்சி அமையாது" என்று ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். வரவிருக்கும் பிஹார் பேரவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து காங்கிரஸ் உயர்மட்ட தலைவர்களுடனான சந்திப்புக்குப் பின்பு தேஜஸ்வி இவ்வாறு நம்பிக்கை தெரிவித்தார்.
காங்கிரஸ் தலைவர்களுடனான சந்திப்புக்குப் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய பிஹார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி கூறுகையில், "நாங்கள் இன்று ஒரு சந்திப்பை நடத்தினோம். எங்களின் விவாதம் ஆரோக்கியமாக இருந்தது. கூட்டணிக் கட்சிகளுடனான அடுத்தக் கூட்டம் ஏப்ரல் 17-ம் தேதி பாட்னாவில் நடக்கும். எதிர்க்கட்சிகள் முழுமையாக தயாராக உள்ளன. நாங்கள் பிஹாரை முன்னெடுத்துச் செல்ல விரும்புகிறோம். மாநிலத்தில் 20 ஆண்டுகள் என்டிஏ ஆட்சியில் இருந்து பிஹார் இன்னும் ஏழை மாநிலமாகவே உள்ளது. மாநிலத்தில் தனி நபர் மற்றும் விவசாயிகளின் வருமானம் மிகவும் குறைவு. அதேபோல் மக்களின் இடம்பெயர்வு அதிகமாக உள்ளது.