வாஷிங்டன்: ரஷ்ய அதிபர் புதினுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் உரையாடி உள்ளது சர்வதேச அளவில் பெரும் பேசும் பொருளாகி உள்ளது. 1000 நாட்களை கடந்தும் தொடர்ந்து வரும் ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் இருவரும் தொலைபேசியில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தியுள்ளது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. இந்த உரையாடலில் ரஷ்யா-உக்ரைன் இரு நாடுகளும் பரஸ்பரம் எதிர்சக்திகளின் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவதை 30 நாட்களுக்கு தவிர்க்க அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தினார்.
இதையேற்ற ரஷ்ய அதிபர் புதின், இது தொடர்பாக ரஷ்ய ராணுவத்துக்கு ஒரு உத்தரவையும் பிறப்பித்துள்ளார். உக்ரைனில் அணு உலை மீது ரஷ்யா டிரோன் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டி இருந்த நிலையில், எரிசக்தி கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை தவிர்க்க ஒப்புக் கொண்டுள்ளார் ரஷ்ய அதிபர் புதின். மனித இழப்புகளை தவிர்க்கவும், போரை முடிவுக்கு கொண்டுவரவும் அமெரிக்காவின் உதவிகளுக்காக டிரம்பிற்கு புதின் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான வழிகளை ஆராய அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாகவும் புதின் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் நிலையான மற்றும் நிரந்தர தீர்வுகாண வேண்டும் எனவும், அமைதியை ஏற்படுத்தும் விதமாக எடுக்கப்படும் முயற்சிகளில் ரஷ்யாவின் பாதுகாப்பையும் கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் டிரம்ப் உடனான உரையாடலில் புதின் வலியுறுத்தியுள்ளார். சமீபத்தில் நடத்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இடையிலான பேச்சுவார்த்தை கடும் விவாதத்தில் முடிந்தது. இந்த நிலையில், டிரம்ப் புதனுடன் உரையாடியுள்ளார். எதிரும், புதிருமாக இருந்த அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஓர் அணியில் சேர்ந்து இருப்பது மூலம் உக்ரைன் – ரஷ்யா போர் முடிவுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
The post புதினுடன் 2 மணி நேரத்திற்கு மேலாக உரையாடிய டிரம்ப்: அமெரிக்க அதிபரின் கோரிக்கையை ஏற்று ராணுவத்திற்கு உத்தரவிட்ட புதின்!! appeared first on Dinakaran.