சென்னை: புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது என அமைச்சர் அன்பில் மகேஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மும்மொழி கொள்கையை அமல்படுத்த தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு மீண்டும் நிர்பந்தம் செய்துள்ளது. புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த முன்வர வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்; மீண்டும் ஒரு மொழிப்போரை ஒன்றிய அரசு கொண்டு வந்துவிடக்கூடாது.
மும்மொழி கொள்கையை ஏற்றால்தான் தமிழ்நாட்டுக்கு கல்விநிதி என்பது ஏற்கத்தக்கதல்ல. தமிழ்நாட்டில் இருமொழி கொள்கையே பின்பற்றப்படும். புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது. அரசு பள்ளியில் படித்த இருமொழி கொள்கையை பின்பற்றியவர்களே இஸ்ரோ உள்பட அனைத்து உயர் அமைப்புகளில் பொறுப்பில் உள்ளனர். மாணவர்கள் நலனை விரும்பினால் ஒன்றிய அரசு நிபந்தனை விதிக்கக் கூடாது. அரசுப் பள்ளியில் படித்து இரு மொழி கொள்கையை பின்பற்றியவர்களே இஸ்ரோ உள்பட அனைத்து உயர் அமைப்புகளில் பொறுப்பில் உள்ளனர்.
மும்மொழி கொள்கையை அமல்படுத்துவது தமிழ்நாட்டின் பண்பாடு, பாரம்பரியத்தை பலவீனப்படுத்தும் அபாயத்தை ஏற்படுத்தும். இருமொழிக் கொள்கையில் கல்வி வெற்றிபெற்றுள்ளது. மும்மொழி கொள்கை தமிழ்நாட்டில் இந்தியை திணிக்கும் மறைமுக முயற்சியாகும். புதிய கல்விக் கொள்கை தொடர்பாக தமிழ்நாட்டிடம் கருத்து கேட்டீர்களா? தன்னிச்சையாக உருவாக்கப்பட்ட புதிய கல்விக்கொள்கையை ஏற்க முடியாது. தூண்டில் போட்டு மீன் சிக்காதா என நினைக்கிறது ஒன்றிய அரசு; தமிழின் பெருமையை நீங்கள் சொல்லி அறிய வேண்டியதில்லை.
இந்தி போன்ற மொழிகளை கற்க தடை செய்யவில்லை. மும்மொழிக் கொள்கை மாணவர்களிடையே அறிவாற்றல் சுமையை உருவாக்கும்; இந்தி இல்லாமல் மூன்றாவது வேறு மொழியை பயிற்றுவிக்க போதிய ஆசிரியர்கள் இல்லை பாடத்திட்டத்திற்கு வெளியே இந்தி மொழியை கற்றுக்கொள்ள ஊக்குவிக்கத்தான் செய்கிறோம். இந்தி திணிப்பால் 56 மொழிகள் அழிக்கப்பட்டுவிட்டன, அதுபோன்ற நிலை தமிழுக்குவந்துவிடக்கூடாது. மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொண்ட மாநிலத்தின் அதிகாரிகளே இந்தியை திணிப்பார்கள் என்று கூறுகின்றனர். ஒன்றிய அரசு அச்சுறுத்துவதை நிறுத்த வேண்டும் என்று கூறினார்.
The post புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது: அமைச்சர் அன்பில் மகேஸ் திட்டவட்டம் appeared first on Dinakaran.