சென்னை: திருவள்ளூரில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலகத்துறை இணைந்து 4ம் ஆண்டு புத்தக திருவிழாவினை நேற்று (7ம் தேதி) முதல் வரும் 17ம் தேதி வரை 10 நாட்கள் நடத்த ஏற்பாடு செய்துள்ளது. இதன் தொடக்க விழாவில் கலந்து கொண்ட பிறகு, அமைச்சர் அன்பில் மகேஷ் நிருபர்களிடம் கூறியதாவது: பள்ளிகூடவாசலில் பதாகையை வைத்துக் கொண்டு பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகளிடம் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து பெறுவது கண்டிக்கத்தக்கது.
பள்ளிக்கு போகிற பிள்ளைகளை கையெழுத்து போட சொல்லி கட்டாயப்படுத்துவது பள்ளிக்குச் செல்லும் மாணவர்களை பயமுறுத்துவதாகவே கருதப்படும். எனவே துறையின் அமைச்சராக கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். பள்ளி வாசல்களில் நின்று பள்ளிக்குச் செல்லும் மாணவர்களை வலுக்கட்டாயமாக அழைத்து கையெழுத்து வாங்கும் பாஜ நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர்கள் தொலைபேசி மூலமாகவும், வாட்ஸ் அப் மூலமாகவும் கண்டித்ததுடன், பெற்றோர் ஆசிரியர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் புகார் அளிக்க உள்ள நிலையில் பாஜ நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
திருவள்ளூரில் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு பயின்ற பள்ளி மாணவி தேர்வு தொடங்கிய நாளன்று தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் காவல்துறை உரிய விசாரணை மேற்கொள்ளும். தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ள தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.
The post புதிய கல்வி கொள்கைக்கு ஆதரவாக மாணவர்களிடம் கையெழுத்து பெறுவது கண்டிக்கத்தக்கது: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி appeared first on Dinakaran.