நியூசிலாந்தின் மவோரி பழங்குடிகளுக்கும் பிரிட்டன் அரசுக்கும் இடையேயான பாரம்பரிய ஒப்பந்தத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பழங்குடியின பெண் எம்.பி. ஹானா தலைமையில் மவோரி எம்.பி.க்கள் பாரம்பரிய பாடல், நடனம் மூலம் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களின் பழங்குடியினப் பாடலும், அதற்கேற்ற ஆவேச நடனமும் நியூசிலாந்து நாடாளுமன்றத்தை அதிரவைத்தது. அவர்களின் உரிமைப் பாடலை செய்வதறியாது கவனித்துவந்த சபாநாயகர் பின்னர் மவோரி எம்.பி.க்கள் அனைவரையும் அவையிலிருந்து வெளியேற்ற உத்தரவிட்டார்.
வைதாங்கி ஒப்பந்தம் – முன்னதாக, 1840-ல் பிரிட்டன் அரசு பிரதிநிதிகளுக்கும், நியூசிலாந்தின் வடக்குத் தீவில் இருக்கும் பூர்வக்குடிகளாக அறியப்படும் மாவோரி தலைவர்களுக்கும் இடையே ‘வைதாங்கி ஒப்பந்தம்’ (Treaty of Waitangi) மேற்கொள்ளப்பட்டது. இதில் மாவோரி பூர்வக்குடிகளுக்கு சில சலுகைகளும், உரிமைகளையும் வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.