புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே மண்டையூர், வடவாளம், திருச்சி நவலூர் குட்டப்பட்டில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடந்தது. இதில் 2,100 காளைகளுடன் 1000 வீரர்கள் மல்லுக்கட்டினர். புதுக்கோட்டை மாவட்டம் மண்டையூரில் முருகன் கோயில் பொங்கல் விழாவையொட்டி இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இதில் மதுரை, திருச்சி, தஞ்சை, புதுக்கோட்ைட, சிவகங்கை உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து 700 காளைகள் அழைத்து வரப்பட்டன. 300 வீரர்கள் பங்கேற்றனர். காளைகள், வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. காலை 9 மணிக்கு ஜல்லிக்கட்டுப் போட்டியை, திமுக வடக்கு மாவட்ட செயலாளர் செல்ல பாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முதலில் கோயில் காளையும், அடுத்தடுத்து மற்ற காளைகளும் அவிழ்த்து விடப்பட்டன. வீரர்கள் போட்டி போட்டு காளைகளை அடக்கினர். இதில் சில காளைகள் களத்தில் நின்று போக்குகாட்டியது. போட்டியில் வெற்றிபெற்ற காளைகள், வீரர்களுக்கு கட்டில், பீரோ, நாற்காலி உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டது.
இதேபோல் ஆலங்குடி அருகேயுள்ள வடவாளத்தில் அய்யனார், கருப்பர் கோயில் திருவிழாவையொட்டி இன்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. போட்டியை சுற்றுசூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார். இதில் 800 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை 300 மாடு பிடி வீரர்கள் கலந்து கொண்டு அடக்கினர். அப்போது, காளைகள் முட்டியதில் சில வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர். வீரர்களின் பிடியில் சிக்காமல் போக்குக்காட்டிய காளைகளுக்கும், திமிறிய காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் பல்வேறு பரிசுப்பொருள்கள் வழங்கப்பட்டன.
திருச்சி ராம்ஜிநகர் அருகே உள்ள நவலூர் குட்டப்பட்டில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சி, கரூர், சேலம் மற்றும் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 600 காளைகள் மற்றும் 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். காலை 8.40 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி எம்எல்ஏ பழனியாண்டி, ஆர்டிஓ சீனிவாசன் கொடியசைத்து துவக்கி வைத்தனர். முதலில் கோயில் காளையும், அடுத்தடுத்து மற்ற காளைகளும் அவிழ்த்து விடப்பட்டன. காலை 10 மணிவரை 80 காளைகள் அவிழ்த்து விடப்பட்ட நிலையில் காளைகள் முட்டியதில் 6 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
போட்டியில் வெற்றி பெற்ற காளைகள், வீரர்களுக்கு தங்க காசு, வெள்ளி காசு, பிரிட்ஜ், டிவி, சைக்கிள், பீரோ, குக்கர், கிரைண்டர், மிக்ஸி, கட்டில், சீலிங் பேன் போன்ற பரிசு பொருள்கள் வழங்கப்பட்டன.
The post புதுக்கோட்டை, திருச்சியில் ஜல்லிக்கட்டு 2,100 காளைகள் ஆக்ரோஷ பாய்ச்சல்: 1,000 வீரர்கள் மல்லுக்கட்டு appeared first on Dinakaran.