மும்பை: மகாராஷ்டிராவின் புனே பேருந்து நிலையத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நீதியை நிலைநாட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணைக்கு பின்பு உண்மை தெரியவரும் என்று மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அஜித் பவார் கூறுகையில், “நேற்று முன்தினம் வரை மக்கள் புனே பாலியல் வன்கொடுமையில் தொடர்புடைய நபர் ஏன் கைது செய்யப்படவில்லை என கேள்வி எழுப்பினர். குற்றம்சாட்டப்பட்டவர் ஒரு கரும்பு காட்டில் ஒளிந்திருந்தார். அவரைப் பிடிக்க அரசு ட்ரோன்களைப் பயன்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு முயற்சி செய்யும் அளவுக்கு அவரின் நிலைமை இருந்தது. இதுபோன்ற சம்பவங்கள் (பாலியல் வன்கொடுமை) எங்கும் நடக்கக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். இப்போது முறையான விசாரணை நடப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரிவான விசாரணைக்கு பின்பு உண்மைகள் வெளியே வரும்.” என்று தெரிவித்தார்.