ராமேசுவரம்: வங்கக் கடலில் நிலவும் புயல் சின்னம் காரணமாக பாம்பன் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள பல்வேறு துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு புதன்கிழமை ஏற்றப்பட்டது.
வங்கக் கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுபெறக் கூடும் எனவும், இது வடக்கு – வடமேற்கு திசையில் இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டி, தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும், என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இலங்கை – திரிகோணமலையிலிருந்து தென்கிழக்கே சுமார் 120 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகபட்டினத்திலிருந்து தென்கிழக்கே 370 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுவையிலிருந்து தென்கிழக்கே 470 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து தென்கிழக்கே 550 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மணிக்கு சுமார் 15 கிலோ மீட்டர் வேகத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.