கடலூர்/விழுப்புரம்: கடலூர் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட திடீர்குப்பம், ஆல்பேட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சார்ந்த மக்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர் அவர் செய்தியா ளர்களிடம் பேசுகையில், “சாத்தனூர் அணை திறப்பதில் அரசு எந்தவித முன் ஜாக்கிரதையும் மேற்கொள்ளவில்லை. அதனால் கடலூரில் பெரும் சேதம் ஏற்பட்டது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.2,000 அறிவித்திருப்பது ஏற்புடையது அல்ல. மிக்ஜாம் புயலுக்கு ரூ.6,000 வழங்கிய தமிழக அரசு, ஒரே அளவு மழை புயலுக்கு வித்தியாசம் ஏன்? இழப்புகளின் கணக்கின்படி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10,500 வழங்க வேண்டும். மத்திய அரசு கடந்த மாதம் வரை ரூ.944 கோடி மாநில அரசுக்கு தந்துள்ளது. அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வாரி இறைத்ததில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் மக்கள் எவ்வாறு கோபத்தை காண்பிப்பது? முதல்வர் நிதி கேட்பதற்கு எல்லா உரிமையும் உள்ளது. ஆனால் தற்போது ரூ.1,500 கோடி அளவிற்கு தமிழக அரசிடம் நிதி உள்ளது.