சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி வரையிலான 4-வது வழித்தடத்தில் ஒருபகுதியாக, பூந்தமல்லி – போரூர் இடையே உயர்மட்டப்பாதையில் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. வரும் மார்ச் மாதத்தில் ரயில் தண்டவாளம் அமைக்கும் பணிகள் நிறைவடையும். அனைத்து பணிகளையும் ஜூன் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. அதாவது, மாதவரம் – சிறுசேரி வரையிலான 3-வது வழித்தடம் (45.4 கி.மீ.), கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி பைபாஸ் வரையிலான 4-வது வழித்தடம் (26.1 கி.மீ.), மாதவரம் – சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடம் (44.6 கி.மீ.) ஆகியவை ஆகும். இவற்றில் கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி வரையிலான (26.1 கி.மீ.) வழித்தடம் முக்கியமானதாக இருக்கிறது.