சென்னை: பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சிறுவணிகர்களுக்கு இன்று முதல் சிறப்பு வணிகக்கடன் திட்டம் முகாம் நடைபெற உள்ளதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் நேற்று வெளியிட்ட அறிக்கை: பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அதிக கனமழை காரணமாக சிறுவணிகர்கள், சிறு கடை உரிமையாளர்கள் மற்றும் தெருவோர வியாபாரிகள் பெரிய பாதிப்பை சந்தித்துள்ளனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின்படி, சிறுவணிகர்களுக்கு உதவிகரம் நீட்ட வேண்டிய அவசரத்தேவையை கருத்தில் கொண்டும், உள்ளூர் பொருளாதாரத்தில் அவர்களது பங்களிப்பை அறிந்தும், அவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கவும் ‘‘சிறப்பு சிறு வணிகக் கடன் திட்டம்” மூலம் முகாம் அமைத்து கடன் வழங்கப்பட உள்ளது. கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி மூலம் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு தகுதியானவர்களுக்கு குறைந்த வட்டியில் ரூ.10,000 முதல் ரூ.1 லட்சம் வரை சிறுவணிகக்கடன் வழங்கப்பட உள்ளது.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கூட்டுறவு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள், தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்த அட்டை உடைய தெருவியாபாரிகள், சிறு வணிகர்கள், வணிக உபயோகத்திற்காக மின் இணைப்பு பெற்ற சிறு கடை வியாபாரிகள், தெருவோரங்களில் வியாபாரம் செய்யும் பூ வியாபாரிகள், காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்பவர்கள், சாலையோர உணவகங்கள் நடத்துபவர்கள், கைவினைஞர்கள், மீனவர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் (புயலால் பழுதடைந்த ஆட்டோவினை சீரமைக்க),
அமைப்புசாரா தொழிலாளர்கள், நடைபாதையில் கடை வைத்திருப்பவர்கள் ஆகிய சிறு வணிகர்கள்/சிறு, குறு தொழில் முனைவோர்கள் இத்திட்டத்தின் மூலம் கடன் பெற தகுதியானவர்கள். இந்த ‘‘சிறப்பு சிறு வணிகக் கடன் திட்டம்” முகாம்கள் மேற்கண்ட மாவட்டங்களில் 6ம் தேதி (இன்று) முதல் வரும் 12ம் தேதி வரை நடைபெற உள்ளது.
விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் மரக்காணம், திருக்கோவிலூர், பெரியசெவலை, கண்டாச்சிபுரம், விக்கிரவாண்டி ஆகிய கிளைகளிலும், கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் மஞ்சகுப்பம், செம்மண்டலம், கூத்தப்பாக்கம், நெல்லிகுப்பம், பண்ருட்டி ஆகிய கிளைகளிலும் நடைபெற உள்ளது. இந்த ”சிறப்பு சிறு வணிகக் கடன் திட்டம்” முகாம்களில் சிறுவணிகர்கள் உரிய ஆவணங்கள் மூலம் விண்ணப்பித்து பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட 6 மாவட்டங்களில் சிறுவணிகர்களுக்கு இன்று முதல் சிறப்பு கடன் திட்டம் முகாம்: அமைச்சர் பெரியகருப்பன் அறிவிப்பு appeared first on Dinakaran.