மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் வசிக்கும் 19 வயது பெண்ணை கடந்த மார்ச் 23ம் தேதி வக்கீல் அப்துல் ரசாக்(48) என்பவர் பின்தொடர்ந்து பாலியல் சைகை செய்த குற்றத்திற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டார். மேலும், விசாரணையில் அதே பெண்ணை பின்தொடர்ந்து தொல்லை கொடுத்த காரணத்திற்காக மேட்டுப்பாளையம் ரயில்வே போலீசாரால் இவர் மீது வழக்குப்பதியப்பட்டு வழக்கு நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
இந்நிலையில் தமிழ்நாடு பெண்கள் தொல்லை செய்தல் தடுப்புச்சட்டத்தின் கீழ் கடந்த ஜனவரியில் தமிழக முதல்வரால் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தின் உட்பிரிவு 7 சி-யின் படி, அப்துல் ரசாக்கிற்கு ஓராண்டு நன்னடத்தை பிணை ஆணை பத்திரம் நேற்று வழங்கப்பட்டது. அதன்படி, இந்த ஓராண்டில் அப்துல் ரசாக் மீண்டும் அப்பெண்ணை தொல்லை கொடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவாரானால் அவருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இவ்வாறு புதிய திருத்த சட்டத்தின்படி கோவை மாவட்டத்தில் பாதுகாப்பு பிணை ஆணை பெறுவது இதுவே முதல் முறையாகும் என கோவை எஸ்பி கார்த்திகேயன் கூறினார்.
The post பெண் வன்கொடுமை சட்டத்தில் வக்கீலுக்கு நன்னடத்தை பிணை ஆணை appeared first on Dinakaran.