பெரம்பலூர்: வங்கக்கடலில் நிலை கொண்ட பெஞ்சல் புயல் காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 30ம் தேதி முதல் நேற்றிரவு இரவு வரை விட்டு விட்டு மழை பெய்தது. பெரம்பலூர், திருச்சி, சேலத்தை இணைக்கும் பச்சைமலையிலும் கனமழை கொட்டியது. இங்கு பெய்த மழையால் கல்லாற்றில் மழைநீர் பெருக்கெடுத்து செல்கிறது. ஏற்கனவே கடந்த அக்டோபர் 10ம் தேதி முதல் பெய்த வடகிழக்கு பருவமழையால் 52.630 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் பெரிய ஏரி நிரம்பி வழிந்தது. கல்லாற்றில் செல்லும் தண்ணீரில் குறிப்பிட்ட அளவு அப்பகுதி விவசாயிகளால் அரும்பாவூர் பெரிய ஏரிக்கு திருப்பி விடப்படுவதால் தொடர்ந்து இந்த ஏரி 48 நாட்களாக நிரம்பி வழிந்தது.
இந்தநிலையில் நேற்றிரவு பெய்த பலத்த மழையால் அரும்பாவூர் ஏரி முழு கொள்ளளவை தாண்டியது. இதனால் அரும்பாவூர் பெரிய ஏரி மதகு அருகே உள்ள கரைப்பகுதியில் 15 அடி தூரத்துக்கு இன்று அதிகாலையில் உடைப்பு ஏற்பட்டது. ஏரியில் இருந்து வெளியேறிய தண்ணீர் அரும்பாவூர் பகுதியில் 200 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா பயிர் வயல்களை மூழ்கடித்தவாறு தண்ணீர் வழிந்தோடி, 1 கிமீ தொலைவில் உள்ள கல்லாற்றில் கலந்து வருகிறது.
இந்த தகவல் அறிந்ததும் மாவட்ட நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் சீனிவாசன், உதவி பொறியாளர் பார்த்திபன் மற்றும் நீர்வளத்துறை ஊழியர்கள் 30க்கும் மேற்பட்டோர் ஏரி கரை உடைந்த பகுதிக்கு சென்று மணல் முட்டைகளை அடுக்கி வைத்து தண்ணீர் மேலும் வெளியேறாமல் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். பச்சைமலையில் இருந்து உற்பத்தியாகி வரும் கல்லாற்று நீர் அரும்பாவூர் பெரிய ஏரிக்கு தொடர்ந்து வருவதால் தண்ணீர் வெளியேறுவதை தடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக நீர்வளத்துறையினர் தெரிவித்தனர்.
வேப்பந்தட்டை தாசில்தார் மாயகிருஷ்ணன், அரும்பாவூர் பேரூராட்சி தலைவர் வள்ளியம்மை ரவிச்சந்திரன், பேரூராட்சி செயல் அலுவலர் தியாகராஜன் மற்றும் அந்த பகுதி வேளாண் அலுவலர்கள் தண்ணீர் செல்லும் பகுதிகளை பார்வையிட்டு பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
The post பெரம்பலூர் மாவட்டத்தில் பலத்த மழை; அரும்பாவூர் பெரிய ஏரி கரை உடைந்தது: 200 ஏக்கர் சம்பா பயிர்கள் மூழ்கியது appeared first on Dinakaran.