சென்னை: பெரியார் குறித்து இழிவாக பேசியது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச திட்டம் தீட்டிய ஒரே அமைப்பை சேர்ந்த 10 பேரை உளவுத்துறை அளித்த தகவலின் படி போலீசார் கைது செய்தனர். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் குறித்து முன்னுக்கு பின் முரணாக பேசி வருகிறார். இதை தொடர்ந்து சீமானை கண்டித்து பெரியார் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தினர்.
இதுதவிர நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சென்னை, திருநெல்வேலி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கடலூர், சேலம், தென்காசி, தஞ்சை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் பெரியார் அமைப்புகள், மற்றும் திராவிடர் கழகத்தினர் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் மீது முகாந்திரம் இருந்ததால், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சென்னை சைபர் க்ரைம் மற்றும் மாவட்ட காவல் நிலையங்கள் என மொத்தம் மாநிலம் முழுவதும் உண்மைக்கு புறம்பாக பேசியது. இரு சமூகங்களுக்கு இடையே மோதலை உருவாக்குவது, கலவரத்தை தூண்டுவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து சீமான் வீட்டிற்கு கடந்த ஒரு மாதமாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சீமான் வீட்டின் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் யாரேனும் வந்தால் அவர்களை போலீசார் வழிமறித்து விசாரணை நடத்தி அனுப்புகின்றனர். இந்நிலையில் சென்னை சின்ன நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச சிலர் சதித்திட்டம் தீட்டியுள்ளதாகவும், பெட்ரோல் குண்டுகளுடன் ராயப்பேட்டையில் உள்ள தனியார் லாட்ஜ் ஒன்றில் தங்கி இருப்பதாகவும், சென்னை பெருநகர உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனை உளவுத்துறை உடனே ராயப்பேட்டை போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்படி ராயப்பேட்டை போலீசார் சம்பந்தப்பட்ட லாட்ஜில் நேற்று முன்தினம் இரவு அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பெட்ரோல் குண்டுகளுடன் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான வீட்டிற்கு செல்ல தயார் நிலையில் இருந்தது தெரியவந்தது. உடனே லாட்ஜில் பெட்ரோல் குண்டுகளுடன் தங்கி இருந்த 10 பேரை அதிரடியாக கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 3 பெட்ரோல் குண்டுகள் மற்றும் பெட்ரோல் குண்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பாட்டில்கள், பெட்ரோல் உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 10 பேரிடம் விசாரணை நடத்திய போது, பெரியார் குறித்து இழிவாக பேசிய சீமான் வீட்டின் மீது தாக்குதல் நடத்தும் வகையில் திட்டம் தீட்டியது தெரியவந்தது.
மேலும், கைது செய்யப்பட்ட 10 பேரும் ஒரு அமைப்பை சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்தது. அவர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உளவுத்துறையின் முன்னெச்சரிக்கையால் போலீசார் எடுத்து நடவடிக்கையால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
The post பெரியார் குறித்து இழிவு பேச்சு சென்னையில் சீமான் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசும் திட்டம் முறியடிப்பு: உளவுத்துறை தகவலின் படி 10 பேரை போலீஸ் கைது செய்து விசாரணை appeared first on Dinakaran.