பெரியார் சித்தாந்தத்தை பேசி ஓட்டு கேட்க தயாரா என திராவிட கட்சிகளை நோக்கி நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: மக்களவைத் தேர்தல் முடிவுகளின்படி, மாநில கட்சியாக நாம் தமிழரை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது மகிழ்ச்சியளிக்கிறது. எங்களுக்கு விவசாயி சின்னமே கிடைப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் போட்டியிடும். பொங்கலன்று வேட்பாளரை அறிவிக்கிறேன். பிராமணர்களுக்கு பயந்து இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்தது, சாணிக்கு பயந்து மலத்தின் மீது கால் வைத்ததற்கு சமமாகிவிட்டது என திராவிடத்துக்கு அடித்தளமிட்ட பெரியார் பேசியிருக்கிறார். பெரியாரை, திராவிடத்தை, திமுகவை எதிர்த்தால் ஆரியர்கள் உள்ளே வந்துவிடுவார்கள் என்கின்றனர். பெரியார் கடைசி வரை ஆரியத் தலைமையுடன் நட்போடு இருந்தார். மணியம்மையுடனான திருமணத்தின்போது ஆரியத்தை துணைக்கு அழைத்தார். முன்னாள் முதல்வர் அண்ணாதுரை, ராஜாஜியுடன் கூட்டணி வைத்தார். இப்போது ஆரியம் உள்ளே வந்துவிடும் என்று சொல்பவர்களுக்கு, அப்போது ஆரியத் தோளில் கைபோட்டு சென்று முதல்வர் நாற்காலியில் அமரும்போது தெரியவில்லையா.