சென்னை: பொங்கல் தொகுப்போடு ரூ.2000 வழங்க கோரி பாஜக வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், பாஜக வழக்கறிஞர் ஏற்காடு ஏ.மோகன்தாஸ் சார்பாக வழக்கறிஞர் ஜி எஸ் மணி ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், “கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் தமிழக மக்கள் பெரும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்களது உடைமைகளையும் பொருளாதாரத்தையும் இழந்து, விவசாய பயிர்கள் முற்றிலுமாக நாசமாகி, அனைத்து தரப்பு மக்களும், மிகப்பெரிய சோகத்தில் உள்ளனர். எனவே, பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாட, கடந்த ஆண்டை போல, தமிழக அரசு இந்த ஆண்டும் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.2000 வழங்க உத்தரவிட வேண்டும்.” என்று கூறியிருந்தார்.