சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மக்கள் வளமும், நலமும் பெற்று மகிழ்வுடன் வாழ வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். இதற்கேற்ப தமிழ்நாட்டு மக்களுக்கு வழி பிறக்கும் என்ற நம்பிக்கையை தெரிவித்து இல்லங்கள் தோறும் பொங்கல் பொங்கட்டும். அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: வருகிற பொங்கல் திருநாளை தமிழ் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியோடும், உற்சாகத்தோடும் கொண்டாடி, அனைத்து உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்கிப் பரவ வேண்டுமென மனப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பாமக நிறுவனர் ராமதாஸ்: அனைவரின் துயரங்களும் தீர வேண்டும்; நாட்டில் நலம், வளம், நன்மை, அமைதி, மகிழ்ச்சி, சகோதரத்துவம், சமூகநீதி ஆகியவை செழிக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக, தமிழர்களின் வாழ்க்கையில் தைத்திருநாளும், தமிழ்ப் புத்தாண்டும் எல்லா நன்மைகளையும் வழங்கட்டும். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: இந்துத்துவா சக்திகளையும், சனாதனக் கூட்டங்களையும் பெரியார், அண்ணா, கலைஞர் பூமியில் அடியோடு முறியடிப்போம். உலகம் முழுமையும் கொண்டாடி மகிழ்கின்ற தமிழ்க்குடி மக்கள், ஈழத்தமிழர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள். தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: அனைவருக்கும் இனி வரும் காலம் இனிப்பான வசந்தகாலமாக அமைய, வளமான தமிழகம், வலிமையான பாரதம் ஏற்பட தை பிறக்கும் பொங்கல் திருநாளானது வழிகாட்டட்டும். தமிழர்கள் பொங்கல் பண்டிகையில் கோலமிட்டு, புத்தாடை அணிந்து, புதுப்பானையில் பொங்கல் வைத்து, கரும்பு, மஞ்சள், கனிகள், மலர்கள் வைத்து இறைவனை வணங்கி நலமுடன், வளமுடன், மகிழ்ச்சியாக வாழட்டும். இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்: சமய வேறுபாடுகளையும், சனாதனக் கருத்தியலால் கட்டமைக்கப்பட்ட படிநிலை சாதிய சமூக வேறுபாடுகளையும் பயன்படுத்தி, மதவெறி ஆதிக்க சக்திகள் அரசியல் அதிகாரத்தில் தொடரும் பேராபத்தை உணர்ந்து, அதனை அதிகாரத்திலிருந்தும், சமூக வாழ்வில் இருந்தும் வெளியேற்ற தைத் திருநாளில் உறுதி ஏற்போம்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம்: தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது முதுமொழி. பிறந்திருக்கும் தை அனைத்துப் பகுதி மக்களின் நல்வாழ்விற்கான வழிகளை திறந்துவிடும் என்கிற நம்பிக்கையோடு அனைவருக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகன்: தமிழர்களாய் ஒன்று திரள்வோம், தமிழ்நாட்டு தமிழர்கள், ஈழத்தமிழர்கள், உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் தமிழ் புத்தாண்டு, தமிழர் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோல, விசிக தலைவர் திருமாவளவன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி என்.ஆர்.தனபாலன், இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர், தமிழ்நாடு விவசாயிகள், தொழிலாளர் கட்சி தலைவர் பொன்குமார், தமிழ்நாடு ஐ.என்.டி.யு.சி பொதுச்செயலாளர் மு.பன்னீர்செல்வம், தமிழ்நாடு யாதவ மகாசபை தலைவர் ராமசந்திரன், விஜய் வசந்த் எம்பி., தமிழ்நாடு மண்டபாண்ட தொழிலாளர்கள் குலாலர் சங்க தலைவர் சேமநாராயணன், கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர், முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், சரத்குமார், இந்திர குடியரசு கட்சி தலைவர் தமிழரசன், புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன்மூர்த்தி, இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் மற்றும் நிலத்தரகர்கள் நலச்சங்க தலைவர் விருகை கண்ணன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியன், அகில இந்திய ரியல் எஸ்டேட் வர்த்தகர்கள் மற்றும் முகவர்கள் நலச்சங்க கூட்டமைப்பின் தலைவர் ஹென்றி, தேசிய நாடார் சங்கம் பொதுச்செயலாளர் விஜயகுமார், இந்திய நாடார்கள் பேரமைப்பின் நிறுவனர் ராகம் செளந்திர பாண்டியன் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
The post பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் வளமும், நலமும் பெற்று மக்கள் மகிழ்வுடன் வாழ வேண்டும்: அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து appeared first on Dinakaran.