பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னையில் இருந்து கடந்த 3 நாட்களில் இயக்கப்பட்ட சிறப்பு பேருந்து, ரயில்கள் உள்ளிட்டவை மூலம் 11.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு பயணித்துள்ளனர். இன்றைய தினம் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்ப்பதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொங்கல் பண்டிகையையொட்டி, கடந்த 10-ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, சென்னையிலும் 3 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றின் மூலம் முதல் நாளில் 1.87 லட்சம் பேர், நேற்று முன்தினம் 2.25 லட்சம் பேர் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு பயணமாகியிருந்தனர். இதன் தொடர்ச்சியாக நேற்றும் சொந்த ஊர்களுக்கு பயணிக்க பேருந்து ரயில் நிலையங்களை நோக்கி மக்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். குறிப்பாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அதேநேரம், முன்பதிவில்லா பேருந்து குறைவாக இயக்கப்பட்டதாக அதிகாரிகளுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபடும் சம்பவங்களும் அரங்கேறின. இதற்கிடையே, பயணிகளுக்கு பொழுதுபோக்காக இசை கச்சேரி, நடன நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதேபோல், மாதவரம், கோயம்பேடு நிலையங்களிலும் கணிசமான கூட்டம் காணப்பட்டது. இது ஒரு புறமிருக்க ஆம்னி பேருந்துகளை பயன்படுத்துவோர் போரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பயணித்தனர். ஞாயிற்றுக்கிழமை என்ற போதிலும் ஊர் செல்ல தொடர் பயணம் மேற்கொண்டவர்களால் முக்கிய சாலைகளில் லேசான போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.