சென்னை: பொங்கல் முடிந்து சென்னை திரும்புவோரின் வாகன நெரிசலை குறைக்க 3 நாட்களுக்கு ஜிஎஸ்டி, ஓஎம்ஆர், இசிஆர் சாலைகளில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதித்து காவல்துறை கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகளுக்கும் கடந்த ஜன 14ம் தேதி முதல் 19ம் தேதி வரை 6 நாட்கள் அரசு விடுமுறை விடப்பட்டது. இதனை தொடர்ந்து சென்னையில் இருந்து பொங்கல் பண்டிகையை கொண்டாட அவரவர் சொந்த ஊருக்கு சென்றனர். தற்போது பொங்கல் தொடர் விடுமுறை முடிந்து திங்கட்கிழமை பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகத்திற்கு மக்கள் செல்லவிருக்கும் நிலையில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னையை நோக்கி மக்கள் படையெடுக்க தொடங்கியுள்ளனர்.
பொங்கல் திருநாள் முடிந்த பின்னர், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு வரும் பயணிளுக்காக தினசரி இயக்கக் கூடிய 10,460 பேருந்துகளுடன் 5,290 சிறப்புப் பேருந்துகளும் ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 6,926 என ஆக மொத்தம் 22,676 பேருந்துகளும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த 15ம் தேதி வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு 800 பேருந்துகளும், சென்னை தவிர மற்ற இடங்களுக்கு 900 பேருந்துகளும் இயக்கபட்டது. ஜன.16ம் தேதி பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு 900 பேருந்துகளும், சென்னை தவிர மற்ற இடங்களுக்கு 1,082 பேருந்துகளும் இயக்கபட்டது. பொங்கல் விடுமுறை முடிந்து நேற்றைய தினம் சென்னையில் இயல்புநிலை மெல்ல திரும்ப தொடங்கியது. பொங்கல் விடுமுறைக்காக மூடப்பட்ட கடைகள் திறக்கப்பட்டன.
வெள்ளிக்கிழமை அலுவலகம் செல்ல வேண்டிய நிலையில் இருந்தவர்கள் ஜன.15,16ம் தேதி இயக்கப்பட்ட பேருந்துகளில் பயணம் மேற்கொண்டனர். பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் 19ம் தேதி வரை விடுமுறை என்பதால் பெரும்பாலானோர் இன்றும், நாளை மீண்டும் சென்னை திரும்புவார்கள் என்பதால் இன்று வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு 1,320 பேருந்துகளும், சென்னை தவிர மற்ற இடங்களுக்கு 1,707 பேருந்துகளும் இயக்கபடவுள்ளது. நாளை சென்னைக்கு கூடுதலாக 2,210 பேருந்துகளும், சென்னை தவிர மற்ற இடங்களுக்கு 3,237 பேருந்துகளும் இயக்கபடவுள்ளது. அரசு பேருந்துகளில் பயணம் மேற்கொள்ள இன்று 29,056 பயணிகளும் மற்றும் நாளை 42,917 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே சென்னை திரும்பும் பயணிகளுக்காக நாளை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து அட்டவணைப்படி தினமும் இயக்கப்படும். மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகளுடன் கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் திங்கள்கிழமை அதிகாலை முதல் கிளாம்பாக்கத்தில் அதிக பயணிகள் வரக்கூடும் என்பதால் தற்போது இயக்கப்பட்டு வரும் 482 பேருந்துகளுடன் கூடுதலாக 500 பேருந்துகள் என மொத்தம் 982 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
இந்நாட்களில் பயணிகளின் கூட்ட நெரிசல் குறையும் வரை கிளாம்பாக்கம், தாம்பரம் ரயில் நிலையம், பூந்தமல்லி, கோயம்பேடு, மாதவரம், செங்குன்றம், எழும்பூர் ரயில் நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையம் என அனைத்து முக்கிய பேருந்து நிறுத்தங்களிலும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு பேருந்துகளின் இயக்கங்களை கண்காணிக்கவும் உத்தரவிடப் பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் சென்ற மக்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக 19ம் தேதி சென்னைக்கு திரும்பினால் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும். எனவே, பொதுமக்கள் தங்களது பயணத் திட்டங்களை மாற்றி இன்றுமுதல் பயணத்தை மேற்கொள்ளுமாறும் போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது.
குறிப்பாக பொங்கல் முடிந்து சென்னை திரும்புவோரின் வாகன நெரிசலை குறைக்க 3 நாட்களுக்கு காவல்துறை சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வெளியூரில் இருந்து சென்னை வரும் கனரக வாகனங்கள் பரனூரில் இருந்து பெரும்புதூர் வழியாக செல்ல மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கனரக வாகனங்கள் இல்லா சாதாரண வாகனங்கள் ஒரகடம் சந்திப்பில் இருந்து திரும்பி பெரும்புதூர் வழியாக செல்லலாம். திருப்போரூர் வழியாக சென்னைக்குள் நுழையும் கனரக வாகனங்கள் செங்கல்பட்டு வழியாக பயணிக்கும் வகையில் திட்டமிட்டுள்ளது. கனரக வாகனங்கள் ஜிஎஸ்டி, ஈசிஆர், ஓஎம்ஆர் சாலைகளில் செல்ல தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும் பல்லாவரம் புதிய பாலத்தில் வரும் திங்கட்கிழமை வரை சென்னை நோக்கி ஒருவழி போக்குவரத்தாக தேவைக்கு ஏற்ப மாற்றப்படவும், ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்தை விரைவுபடுத்த ஆம்னி பேருந்துகள் வெளிவட்ட சாலை வழியாக திருப்பி அனுப்பப்பட உள்ளது. எனவே சிரமம் இன்றி மக்கள் சென்னைக்கு திரும்ப ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று காவல்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
The post பொங்கல் முடிந்து சென்னை திரும்புவோரின் வாகன நெரிசலை குறைக்க இன்று முதல் 3 நாட்களுக்கு கனரக வாகனங்களுக்கு தடை: காவல்துறை அறிவுறுத்தல் appeared first on Dinakaran.