இயக்குநர் மாரி செல்வராஜுக்கும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கும் நெருக்கம் அதிகம் என்பார்கள். அப்படி இருக்கையில், மாரி செல்வராஜின் சொந்த கிராமமான புளியங்குளத்தைச் சேர்ந்த 300 பேர் விஜய்யின் தவெக-வில் தங்களை இணைத்துக் கொண்டிருப்பது அனைவரையும் புருவம் உயர்த்த வைத்திருக்கிறது.
2026 சட்டப்பேரவை தேர்தலை இலக்காக கொண்டு தனது அரசியல் பயணத்தை தொடங்கி இருக்கும் நடிகர் விஜய், மாநிலம் முழுவதும் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக சினிமா இயக்குநர் மாரி செல்வராஜின் சொந்த கிராமமான ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள புளியங்குளத்தைச் சேர்ந்த சுமார் 300 பேர் கடந்த 28-ம் தேதி மொத்தமாக தவெகவில் இணைந்தனர். இதில், திமுக, அதிமுக, விசிக, நாதக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளை சேர்ந்தவர்களும் இருந்தது குறிப்பிடத்தக்கது.