புதுடெல்லி: ராஜீவ்காந்தி மிகச்சிறந்த பிரதமர் என்று மணிசங்கர் அய்யர் நேற்று கருத்து தெரிவித்தார். இங்கிலாந்து படிப்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 2 முறை பெயில் ஆனதாக மணிசங்கர் அய்யர் கருத்து தெரிவித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ராஜீவ்காந்தி மிகச்சிறந்த பிரதமர் என்று மணிசங்கர் அய்யர் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது: எனது புதிய புத்தகமான ‘எ மேவரிக் இன் பாலிடிக்ஸ்’ என்ற சுயசரிதை பற்றிய விவாதத்தில் எனது பேட்டி இரண்டு மணி நேரம், 23 நிமிடங்களுக்கு மேல் நீடித்தது.
இதில் பா.ஜவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மாளவியா ஒரு நிமிடம், 50 வினாடிகளை துல்லியமாக எடுத்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதற்கு 10 விநாடிகளுக்கு பிறகும் எனது பேட்டியை கேட்டு இருந்தால்,’ இன்றுவரை எத்தனை பேர் பிரதமராக இருந்திருந்தாலும் இன்று வரை மிகச்சிறந்த பிரதமர் ராஜீவ்காந்திதான்’ என்று நான் கூறியதை கேட்டு இருப்பார்கள். உண்மையில், ராஜீவ் காந்தியின் பிரதமர் பதவி காலம் குறித்து மிகவும் விரிவான பதிவை எழுதியது நான் மட்டுமே. சுமார் ஒரு வருடம் மற்றும் இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியான ‘ராஜீவ் ஐ நோ’ புத்தகம் அதை சொல்லும்.
இப்போது எனது கேள்வி: பல ஊடகங்கள் ஏன் பாஜ பிரச்சாரத்திற்கான ஒலிபெருக்கிகளாக மாறியுள்ளன? என்பதுதான். ஏனெனில் ராஜீவ்காந்தி தான் மிகச்சிறந்த பிரதமராக விளங்கினார். ஒரு வருடத்திலேயே அசாம், பஞ்சாப் பிரச்னைகளை அவர் தீர்த்து வைத்தார். சீனா, பாகிஸ்தான் பிரச்சனையை முடித்து உறவுகளை மேம்படுத்த நடவடிக்கை எடுத்தார். காங்கிரஸ் கட்சியின் டிஎன்ஏவில் காந்தி குடும்பம் உள்ளது. நேரு-காந்தி குடும்ப உறுப்பினர்கள் கட்சிப் பதவியில் இருந்திருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம். ஆனால் 100 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சித் தொண்டர்களையும், தலைவர்களையும் அவர்கள்தான் பார்த்துக்கொண்டார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
The post பொய் பிரசாரம் செய்கிறது பா.ஜ ராஜீவ் காந்தி மிகச்சிறந்த பிரதமர்: மணிசங்கர் அய்யர் திடீர் பல்டி appeared first on Dinakaran.