மகாகவி பாரதி பிறந்த எட்டையபுரம் முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக, தொழில், வர்த்தகம், பொருளாதார வாய்ப்பு, வசதிகள் மிகுந்த நகரமாக உருவாகியிருக்க வேண்டும். ஆனால், எந்தவித முன்னேற்றமும் இல்லாத பேரூராட்சியாகவே உள்ளது. தற்போது எட்டையபுரம், தாலுகா தலைநகர் ஆகிவிட்டது. இதற்காக, 1990-ல் எட்டையபுரம் திமுக ஒன்றியச் செயலாளர் பா.முத்து, முயற்சியில் என்னுடைய தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டோம்.
எட்டையபுரத்தில் தமிழக அரசின் நெசவு ஆலை ஒன்று உள்ளது. மற்றபடி பெரிய தொழிற்சாலைகள் எதுவும் வரவில்லையே என்ற வருத்தம் என்னுள் இருந்து கொண்டே இருக்கிறது. 1989 சட்டமன்றத் தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் திமுக வேட்பாளராக நான் போட்டியிட்டேன். அப்போது, “பாரதி பெயரில் நாட்டுப்புறவியல், தமிழ் இலக்கியம், கிராமிய சிந்தனைகள், கிராமிய வளர்ச்சிக்கு பாடுபடுவேன் என்றும், எட்டையபுரத்தோடு தொடர்பு கொண்டவர்களான நாவலர் சோமசுந்தர பாரதி, உமறுப் புலவர், முத்துசாமி தீட்சிதர் ஆகியோரைக் குறித்து ஆய்வுப் பலகை வைப்பேன்” என்றும் தேர்தல் பரப்புரையில் உறுதி கொடுத்தேன்.