அமெரிக்காவுக்கு வரும் வெளிநாட்டுப் பொருட்களுக்கு வரி விகிதங்களை உயர்த்தி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சில தினங்களுக்கு முன்பு வெளியிட்ட அறிவிப்பு, உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை உருவாக்கியதுடன், உலக வர்த்தகத்தையே உலுக்கியுள்ளது. சீனா உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவில் இருந்து வரும் பொருட்களுக்கு பதிலடியாக வரி உயர்வை அறிவித்திருப்பது பொருளாதார போரை துவக்கி வைத்துள்ளது. அமெரிக்காவை பாதுகாக்கப் போகிறேன் என்ற பெயரில் ட்ரம்ப் எடுத்துள்ள முடிவு அமெரிக்காவுக்கே சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த இரண்டு நாட்களில் மட்டும் அமெரிக்க பங்குச் சந்தை 8 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு சரிந்து அந்நாட்டு முதலீட்டாளர்களை நஷ்டமடையச் செய்துள்ளது. இது இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியைவிட மூன்று மடங்கு அதிகம். பொருளாதார வளர்ச்சியடைந்த அமெரிக்கா பின்விளைவுகளைப் பற்றி சற்றும் சிந்திக்காமல் எடுத்துவரும் நடவடிக்கைகள் அமெரிக்கர்களுக்கு மட்டு மின்றி உலக மக்களுக்கும் எதிராக அமைந்துள்ளது.