சென்னை: போப் பிரான்சிஸ் காலமான செய்தி கேட்டு மிகுந்த துயரமும், வருத்தமும் அடைந்தோம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் அவர்கள் தனது 88-வது வயதில் காலமான செய்தி கேட்டு மிகுந்த துயரமும், வருத்தமும் அடைந்தோம்.
அவரது முழு வாழ்க்கையும் இறைவனுக்கும், அவரது திருச்சபைக்கும் சேவை செய்வதற்காகவே அர்ப்பணிக்கப்பட்டது. முற்போக்கான கருத்துகள் கொண்டவராகவும், ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு அளிப்பவராகவும் அறியப்பட்டவர். கத்தோலிக்க மதத்தில் பல்வேறு சீர்திருத்தங்களையும், மாற்றங்களையும் திருச்சபைக்கு உள்ளேயும், வெளியேயும் கொண்டு வந்தவர்.
பத்தாண்டுகளுக்கும் மேலாக தனது போப் ஆண்டவர் பதவியில் இருந்த காலத்தில் மதங்களுகிடையேயான உரையாடலை ஆதரித்ததோடு, மதநல்லிணக்கத்திற்காக பாடுபட்டவர். மதரீதியான கசப்புகளையும், வெறுப்புகளையும் ஏற்றுக் கொள்ள மறுத்தவர். அகதிகள் மற்றும் புலம் பெயர்ந்தவர்களின் உரிமைகளுக்காக வாதாடியவர்.
உலகத்தில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரான போப் பிரான்சிஸ் அவர்களது மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது மறைவினால் வருத்தத்திற்குள்ளாகி இருக்கும் கோடிக்கணக்கான கத்தோலிக்க கிறிஸ்தவ மக்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்
The post போப் பிரான்சிஸ் காலமான செய்தி கேட்டு மிகுந்த துயரமும், வருத்தமும் அடைந்தோம்: செல்வப்பெருந்தகை இரங்கல் appeared first on Dinakaran.