இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்தின் போராட்ட குணமும், அவரது விடாமுயற்சியும் அனைவரும் அறிந்ததுதான். அதற்கு மற்றுமொரு உதாரணமாக அமைந்துள்ளது மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் அவரது ஆட்டம். வலது குதிகால் பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையிலும், அணிக்காக பேட் செய்து அசத்தினார் ரிஷப் பந்த்.
திரைப்படங்களில் வரும் வசனங்களை ரியல் லைஃபில் பிரதிபலிக்கும் வகையில் இந்திய கிரிக்கெட் அணிக்காக தனது உடல், பொருள், ஆவி என அனைத்தையும் கொடுத்து ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் அரை சதம் கடந்தார். இந்தத் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் சதம் விளாசியதும் டைவ் அடித்து, அதை கொண்டாடினார் பந்த். தன்னால், அதை செய்ய முடியும் என்ற நம்பிக்கைதான் அந்த அசாத்திய டைவுக்கு காரணம். அதுபோன்ற கொண்டாட்டத்தை கிரிக்கெட் களத்தில் பார்ப்பது அரிது. அதுதான் ரிஷப் பந்த்.