புதுடெல்லி: இந்தியாவில் புதிய குடியுரிமை சட்டத்தை கொண்டு வரும் வகையில், மக்களவையில் குடியுரிமை மற்றும் வெளிநாட்டினர் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் போலி பாஸ்போர்ட், போலி விசா பயன்படுத்தி நுழைந்தாலோ, தங்கியிருந்தாலோ, இந்தியாவை விட்டு வெளியேறியது கண்டுபிடிக்கப்பட்டாலோ, அதிகபட்சம் 7 ஆண்டு சிறை தண்டனை, ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023-24-ம் நிதி ஆண்டில் இந்தியாவுக்கு மொத்தம் 98.40 லட்சம் வெளிநாட்டினர் வந்துள்ளனர். இந்தியாவுக்குள் நுழையும் பாஸ்போர்ட் சட்டம் (1920), வெளிநாட்டினர் பதிவு சட்டம் (1939), வெளிநாட்டினர் சட்டம் (1946), குடியுரிமை சட்டம் ஆகிய 4 சட்டங்களால் தற்போது வெளிநாட்டினர் வருகை நிர்வகிக்கப்படுகிறது. இந்த சட்டங்களின்படி, வெளிநாட்டினருக்கு பல கட்டுப்பாடுகள் உள்ளன.