இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சி யான காங்கிரசின் முக்கிய தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ப. சிதம்பரம், அவரது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் ஆகியோரது வீடு மற்றும் அலுவலகங்களை சிபிஐ அதிகாரிகள் நேற்று காலையி லிருந்து அதிரடியாக சோதனை நடத்தினர்.
திரு கார்த்தி சிதம்பரம் மீது சுமார் 50 லட்சம் லஞ்சம் வாங்கியதாக புதிய குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து இந்தச் சோதனை நடத்தப்பட்டது.
டெல்லியிலிருந்து வந்த 14 சிபிஐ அதிகாரிகள், இரு குழுக்களாகப் பிரிந்து ஒரே சமயத்தில் சென்னை நுங்கம்பாக்கம் ஹாடோஸ் சாலையில் உள்ள ப.சிதம்பரம், கார்த்தியின் வீடு, அலுவலகங்களில் நேற்று காலை 7.30 மணியளவில் நுழைந்து சோதனையை மேற்கொண்டனர்.
அங்கிருந்த ஊழியர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
சென்னை, மும்பை, கர்நாடகா, பஞ்சாப் ஆகிய இடங்களில் உள்ள அவர்களுக்குச் சொந்தமான இடங் களிலும் சோதனை நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மொத்தம் ஒன்பது இடங்களில் ஐந்து மணி நேரத்துக்கு மேல் சோதனை நடைபெற்றது.
இந்தச் சோதனையின்போது கார்த்தி சிதம்பரம் லண்டனில் இருந்தார். சீன நிறுவனம் ஒன்றுக்கு 250 சீனர்களுக்கு சட்ட விரோதமாக விசா பெற்றுத் தருவதற்காக கார்த்தி சிதம்பரம் ரூ.50 லட்சம் லஞ்சம் வாங்கியதாக அவர் மீது சிபிஐ புதிய வழக்கைப் பதிவு செய்துள்ளது.
“பஞ்சாப்பில் உள்ள தல்வாண்டி சாபோ எரிசக்தி உற்பத்தி நிறுவனம், உள்துறை அமைச்சின் உச்ச வரம்புக்கு மேல் சீன ஊழியர்களை பணியில் அமர்த்த விரும்பியது. 2011ல் அவர்கள் கார்த்தியை அணுகியதாகக் கூறப்படுகிறது. அவர், 50 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்று ஊழியர்களுக்கு விசா ஏற்பாடு செய்து தந்ததாக சிபிஐ அதிகாரி ஒருவர் கூறியிருந்ததை ‘த இந்தி யன் எக்ஸ்பிரஸ்’ மேற்கோள் காட்டியிருந்தது.
இதற்கிடையே சோதனை பற்றி கருத்து தெரிவித்த கார்த்தி சிதம் பரம், “எத்தனை முறைதான் சோதனை நடத்துவார்கள். இது வரை எத்தனை முறை சோதனை நடந்தது என்பதையே மறந்துவிட்டேன்,” என்று கூறியுள்ளார்.
“முதல் தகவல் அறிக்கையில் எனது பெயர் இல்லை. ஆனால் எனது வீட்டிலும் சோதனை நடந்துள்ளது. சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை. எதுவும் பறி முதல் செய்யப்படவில்லை,” என்று டுவிட்டர் பதிவில் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் தொடர்பான முறைகேடு வழக்கில் அவர்களது வீடு, அலுவலகங்களில் சோதனையிடப்பட்டு 2018ல் ப. சிதம்பரமும் 2019ல் கார்த்தியும் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
கடந்த 2007ல் ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து ரூ.305 கோடி நிதி பெறுவ தற்கு ஒப்புதல் அளித்த விவகாரத்தில் அப்போது நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்னமும் நீதிமன்ற விசாரணையில் இருந்து வருகிறது.