புதுடெல்லி: ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் செப்டம்பர் 30-ம் தேதி இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்குகிறது. 8 அணிகள் கலந்து கொள்ளும் இந்த தொடருக்கான மொத்த பரிசுத் தொகை ரூ.122.50 கோடியாக அறிவிக்கப்பட்டிருந்தது. சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.39.95 கோடி வழங்கப்பட உள்ளது.
இந்நிலையில் இந்தத் தொடரில் இந்தியாவில் நடைபெறும் லீக் ஆட்டங்களுக்கான டிக்கெட் விலையை ஐசிசி அறிவித்துள்ளது. ஐசிசி நடத்தும் எந்த தொடர்களுக்கும் இல்லாத வகையில் முதல் கட்ட விற்பனையில் டிக்கெட்டின் விலை ரூ.100 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிக்கெட்கள் விற்பனை வரும் 9-ம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினமே 2-வது கட்ட விற்பனையில் டிக்கெட்களை பெற விரும்பும் ரசிகர்கள் பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.