மும்பை: மகாராஷ்டிர சட்டப்பேரவையில் உள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 20-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் மகாயுதி கூட்டணியில் பாஜக, தேசியவாத காங்கிரஸ்(அஜித் பவார்) மற்றும் சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) கட்சிகளும், மகா விகாஸ் அகாடி கூட்டணியில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) மற்றும் சிவசேனா (உத்தவ் தாக்கரே) கட்சிகளும் போட்டியிட்டன.
இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் பெரும்பான்மையான ஆய்வுகள் மகாயுதி கூட்டணியே மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளன. இதனால் பாஜக, சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) கட்சித் தலைவர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.