சென்னை: கிராமப்புற ஏழை மாணவர்கள் முழுமையான கல்வி சுதந்திரம் பெறும் வரை, எட்டாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி முறை தொடர வேண்டும். எனவே, மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் பள்ளிகளில் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சி வழங்கும் முறையை தொடர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் பள்ளிகளில் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சி வழங்கும் முறை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கல்வித்தரத்தை மேம்படுத்துதல் என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை கிராமப்புற ஏழை மாணவர்களின் கல்வி வாய்ப்புகளை பறித்து விடும். இது மிகவும் தவறான முடிவு.