ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம், புள்ளானேரி கிராம ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் வட்டார நாற்றங்கால் பண்ணையில் நடைபெற்று வரும் மரக்கன்றுகள் வளர்க்கும் பணியை கலெக்டர் சிவசவுந்திரவல்லி நேற்று திடீரென பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம், புள்ளானேரி கிராம ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊர்க வேலை உறுதித்திட்டத்தின் கீழ் 2024-25 ஆம் ஆண்டில் மரக்கன்றுகள் வளர்க்கும் நடவடிக்கையின் அடிப்படையில் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு பணி நடைபெற்று வரும் ‘வட்டார நாற்றங்கால் பண்ணை’ அமைத்தல் பணியை நேற்று கலெக்டர் க.சிவசவுந்திரவல்லி திடீரென பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது வட்டார நாற்றங்கால் பண்ணையில் வளர்க்கப்படும் மரக்கன்றுகளின் வகைகள், மரக்கன்றுகளின் உயரம், மரக்கன்றுகள் வளர்க்கப்படும் பைகளின் அளவுகள், விதைப்படுக்கை இருப்பில் உள்ள விதைகள், மரக்கன்றுகள் நடுதல் பொருட்டு பிற கிராம ஊராட்சிகளுக்கு வழங்கப்பட்ட விவரங்கள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
இந்த வட்டார நாற்றங்கால் பண்ணையில் செங்கொன்றை, மகா கனி, புங்கன், நாவல், வேம்பு, பூவரசன், மூங்கில் உள்ளிட்ட மரக்கன்றுகள் 11,291 தற்போது இருப்பில் உள்ளது. மேலும் மரக்கன்றுகளுக்கு வாரம் இருமுறை நீர் ஊற்றுவதை உறுதி செய்ய வேண்டும். அதிகளவு மரக்கன்றுகளை வளர்க்க வேண்டும்.
முறையான பதிவேடுகளை பராமரித்து மற்றும் புகைப்படங்களை எடுத்து ஆவணப்படுத்தும் பணியை மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.
இந்த ஆய்வின்போது தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர், புள்ளானேரி ஊராட்சி மன்ற தலைவர் த.சங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
The post மரக்கன்றுகள் வளர்க்கும் பணியை கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.