சென்னை: மழைக்குப் பின் ஓரிரு நாளில் பயிர் பாதிப்புகள் குறித்து கணக்கெடுக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 33%க்கு மேல் பயிர் பாதிப்பை கணக்கீடு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவும் அவர் தெரிவித்துள்ளார்
தமிழகத்தின் இயல்பான மழையளவு 920 மி.மீ. இதில் 441.8 மி.மீ (48%) மழையளவு இயல்பாக வடகிழக்கு பருவமழையில் கிடைக்கிறது. வடகிழக்கு பருவமழையின் போது வெப்பமண்டல சூறாவளி மற்றும் அதனுடன் தொடர்புடைய புயல்கள் காரணமாக மாநிலம் அதிகபட்ச பேரிடர்களை சந்திக்கிறது.
வடகிழக்கு பருவமழை இயல்பாக அக்டோபர் 1 முதல் துவங்கும். ஆனால், இவ்வாண்டு 16.10.2024 அன்று துவங்கி பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் டெல்டா மாவட்டங்களில் குறைந்தபட்சமாக கடலூர் மாவட்டத்தில் 57 மி.மீ மழையும், அதிகபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் 148 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.
இதனால் சுமார் 31,853 ஏக்கர் பரப்பில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் நீர் சூழ்ந்துள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் 18,972 ஏக்கர் பரப்பிலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 8,151 ஏக்கர் பரப்பிலும், திருவாரூர் மாவட்டத்தில் 2,391 ஏக்கர் பரப்பிலும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 2,339 ஏக்கர் பரப்பிலும் நீர் சூழ்ந்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வேளாண்மை உதவி இயக்குநர்கள், வேளாண்மை அலுவலர்கள், துணை வேளாண்மை / தோட்டக்கலை அலுவலர்கள் 1963 நபர்கள் மற்றும் உதவி வேளாண்மை/ தோட்டக்கலை அலுவலர்கள் 3945 நபர்கள் ஆகமொத்தம் 5908 நபர்கள் களப்பணியில் உள்ளனர். அவர்கள் விவசாயிகளுக்கு நீரினை வடிப்பது தொடர்பாகவும் அதன் பின் எடுக்க வேண்டிய ஆலோசனைகளையும் கீழ்க்கண்டவாறு வழங்கி வருகிறார்கள்.
1. விளை நிலங்களில் உள்ள சிறுசிறு பாசன மற்றும் வடிநீர் வாய்க்கால்களில் உள்ள, செடி கொடிகளை அகற்றிட வேண்டும்.
2. வடகிழக்கு பருவமழையின் போது வெள்ள மழைநீர் சூழ்ந்துள்ள வயல்களில் உள்ள அதிகப்படியான நீரை வெளியேற்றிட வேண்டும்.
3. வெள்ள மழைக்காலங்களில் உரம் இடுதல், பூச்சி மருந்து தெளித்தல், களைக்கொல்லி இடுதல் போன்றவற்றை தவிர்த்திட வேண்டும்.
4. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நீர் வடிந்தவுடன் மேலுரமாக 22 கிலோ யூரியா, 18 கிலோ ஜிப்சம் ஆகியவற்றுடன் 4 கிலோ வேப்பம் புண்ணாக்கு கலந்து ஒரு இரவு வைத்திருந்து 17 கிலோ பொட்டாஷ் உரத்துடன் கலந்து இட வேண்டும்.
5. தழைச்சத்து மற்றும் நுண்ணூட்டச்சத்து குறைபாடு (மஞ்சள் நோய் ) காணப்பட்டால் 2 கிலோ யூரியாவுடன் 1 கிலோ ஜிங்க் சல்பேட் கலந்து 200 லிட்டர் நீருடன் கைத்தெளிப்பான் கொண்டு இலைவழியூட்டமாக தெளிக்க வேண்டும்.
மேலும், இப்பருவத்திற்கு அனைத்து மாவட்டங்களுக்கும் தேவையான யூரியா 1,82,063 மெ.டன், டிஏபி 39,558 மெ.டன், பொட்டாஷ் 46,268 மெ.டன் மற்றும் காம்ப்ளக்ஸ் 1,18,106 மெ.டன் இரசாயன உரங்கள் தனியார் கடைகளிலும் தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடர்ந்து டிசம்பர் மாத இறுதி வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், அவ்வப்போது ஏற்படும் பயிர் பாதிப்பு நிலவரங்களை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர்கள் கண்காணித்து வருவாய் துறையுடன் இணைந்து 33 சதவீதத்திற்கு மேல் பயிர் பாதிப்பை கணக்கீடு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
The post மழைக்கு பின் பயிர் பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடக்கும்: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேட்டி appeared first on Dinakaran.