சென்னை: ஃபெஞ்சல் புயல் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக பாஜக வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து பாஜக மாநில துணை தலைவர் ஏ.ஜி.சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கை: ஃபெஞ்சல் புயல் தமிழகத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. மாநில அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. வாய்க்கால், ஏரி, குளம் எதுவும் தூர்வாரப்படாமல் மழை நீரை முறையாக சேமிக்க முடியாமல், கடல்நீரோடு கலக்கின்ற அவலநிலை இன்னும் தொடர்வது மாநில அரசின் செயலற்றத் தன்மையை காட்டுகிறது. அறுவடை செய்யும் நிலையில் இருந்த பயிர்களெல்லாம் நாசமானதை கண்ட விவசாயிகள் அழுத காட்சி மிகவும் வேதனை அளிக்கிறது.