சென்னை: “உடலில் உள்ள உறுப்புகள் பலம் பெறுவது, முழு உடலை வலிமையற்றதாக்கி விடுமா? என்பது போல மாநில உரிமைகளை திமுக கோருவது இந்திய நாட்டை வலிமையற்றதாக மாற்றிவிடுமா? என்பதற்கு நயினார் நாகேந்திரன் பதில் சொல்ல வேண்டும். ” என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டப்பேரவையில் நேற்று 110 விதியின் கீழ் மாநில சுயாட்சி தொடர்பாக முக்கிய அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். மாநில நலனில் அக்கறை இல்லாத அதிமுகவும் அதன் கூட்டாளியாக பாஜகவும் வெளிநடப்பு செய்தன. இதன் மூலம் டெல்லி சர்வாதிகாரத்தின் அடிமைகள் நாங்கள் என அதிமுக பாஜக உறுப்பினர்கள் தங்களை வெளிப்படுத்தினர்.