சென்னை: தமிழக சட்டப்பேரவையில் வரும் 14ம் தேதி முதல்முறையாக மாநில நிதிநிலை தொடர்பான பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2025-26ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை வரும் 14ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.
இந்த பட்ஜெட் பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வண்ணம் இருக்கும் என நம்பப்படுகிறது. அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் என்பதால் இடைக்கால பட்ஜெட் தான் தாக்கல் செய்யப்படும். அதன்படி தற்போதைய அரசின் கடைசி முழு பட்ஜெட் இதுவாகும். முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மகளிர் உரிமை தொகை, விடியல் பயணம், நான் முதல்வன், புதுமை பெண், இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம் என பல திட்டங்களை கொண்டு வந்து திறம்பட செயல்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் இந்த கடைசி முழு பட்ஜெட் முக்கியத்துவம் வாய்ந்தவையாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு பொருளாதார ஆய்வறிக்கையை தமிழக அரசு முதல்முறையாக தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆய்வறிக்கையில் அரசின் நிதிநிலை, உள்நாட்டு உற்பத்தி, செயல்படுத்தி வரும் திட்டங்களின் நிலை, வரும் ஆண்டுகளில் மாநில நிதிநிலை எப்படி இருக்கும் என பல்வேறு தரவுகள் இடம்பெறவுள்ளன.
பொதுவாக ஒன்றிய அரசு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னர் நிதிநிலை அமைச்சகத்தால் இதுபோன்ற பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். அந்தவகையில், தற்போது புதிய நடைமுறையை தமிழ்நாடு அரசு கொண்டுவர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
The post மாநில நிதிநிலை தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்முறையாக பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்: மார்ச் 14ம் தேதி சமர்ப்பிக்கப்படுகிறது appeared first on Dinakaran.