சென்னை: மானசரோவர் மற்றும் முக்திநாத் ஆன்மிகப் பயணம் மேற்கொண்டோர் அரசு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் பி.கே. சேகர்பாபு தகவல் தெரிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறை தொன்மையான கோயில்களில் திருப்பணிகளை மேற்கொண்டு குடமுழுக்கு நடத்துதல், திருத்தேர் மற்றும் குளங்களை சீரமைத்தல், பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல், கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்தல் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதோடு, இறையன்பர்கள் பயன்பெறும் வகையில் ஆன்மிகப் பயணங்களுக்கு அரசு மானியம் மற்றும் மூத்த குடிமக்களுக்கு பல்வேறு கட்டணமில்லா ஆன்மிகப் பயணங்களையும் செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆண்டுதோறும் சீனாவிலுள்ள மானசரோவர் மற்றும் நேபாளத்திலுள்ள முக்திநாத் ஆகிய திருத்தலங்களுக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொண்ட தலா 500 நபர்களுக்கு அரசு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின், மானசரோவர் சென்று வந்தவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அரசு மானியம் ரூ.40,000/-ஐ ரூ.50,000/- ஆகவும், முக்திநாத் சென்று வந்தவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அரசு மானியம் ரூ.10,000/-ஐ ரூ.20,000/- ஆகவும் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.
2024-2025 ஆம் நிதியாண்டில் (01.04.2024 முதல் 31.03.2025 வரை) சீனாவிலுள்ள மானசரோவர் மற்றும் நேபாளத்திலுள்ள முக்திநாத் ஆகிய திருத்தலங்களுக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொண்டு முழுமையாக பயணம் முடித்து திரும்பிய, 18 வயதிற்கு மேல் 70 வயதிற்குட்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த இந்து மதத்தை சார்ந்தவர்களுக்கு மட்டும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில்/வழங்கப்படும் அரசு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.
இதற்கான விண்ணப்ப படிவங்களை www.tnhrce.gov.in <http://www.tnhrce.gov.in> என்ற இத்துறையின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, அனைத்து விவரங்களையும் முழுமையாக பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் “ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, எண்.119, உத்தமர் காந்தி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை – 600034″ என்ற முகவரிக்கு 30.04.2025 ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பிட வேண்டும். மேலும், கூடுதல் விவரங்களை இந்து சமய அறநிலையத்துறையின் இணையதளம் (www.tnhrce.gov.in <http://www.tnhrce.gov.in>) மூலம் தெரிந்து கொள்ளலாம். சீனாவிலுள்ள மானசரோவர் மற்றும் நேபாளத்திலுள்ள முக்திநாத் ஆகிய திருத்தலங்களுக்கு ஆன்மிகப் பயணம் சென்று வந்த தகுதியுடைய இறையன்பர்கள் உரிய முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.
The post மானசரோவர் மற்றும் முக்திநாத் ஆன்மிகப் பயணம் மேற்கொண்டோர் அரசு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்: அமைச்சர் சேகர்பாபு appeared first on Dinakaran.